‘800’ திரைப்பட விவகாரம்: விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
‘800’ திரைப்பட விவகாரத்தில் விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை,
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முத்தையா முரளிதரன் குறித்த 800 படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா? என்பது பற்றி ஒரிரு நாளில் ஆலோசித்து தனது முடிவை விஜய்சேதுபதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், 800 படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார். ‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது. தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.