"சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன?" - விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சித்த மருத்துவத்தில் எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், " தான் கண்டறிந்த, 66 மூலிகைகளைக் கொண்ட IMPRO எனும் மருத்துவப் பொடியை வைராலஜி துறை நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளைக் அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," சித்த மருத்துவரின் கோரிக்கை தொடர்பாக மத்திய சித்த ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட மனுவில் திருத்தங்கள் இருந்ததால் மீண்டும், திருத்தம் செய்து அனுப்பக் கோரி மனுதாரருக்கு திரும்ப அனுப்பப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட கோரிக்கை தற்போது வரை அரசுக்கு அனுப்பப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், ஆராய்ச்சிக்கு முன்பாக எவ்வாறு மருந்துகளை மருத்துவர் விற்பனை செய்கிறார்? எனக் கேள்வி எழுப்பினர். ஏற்கெனவே காலதாமதம் ஆன நிலையில் சித்த மருத்துவர் உடனடியாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு திருத்தம் செய்த மனுவை அனுப்ப உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, ஆண்டுதோறும் சித்தமருத்துவப் பிரிவுக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கக் கூடிய சூழலில் முறையான ஆராய்ச்சி எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர், "மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்தான் கபசுர குடிநீர் கொரோனா நோய்க்காக வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள்,"இது ஏன் மத்திய அரசால் இதுவரை அறிவிக்கப்படவில்லை? " எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில், "ஆய்வு முடிவுகளை அறிவிப்பதற்கு ஒரு சில விதிமுறைகள் உள்ளன. முறையான ஆய்வுகள் நடத்திய பின்னரே முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
நோய் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு மருந்தாக கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன " எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய அரசு கொரோனா நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க பல கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் சூழலில், சித்த மருந்துகளை ஊக்குவிக்கலாமே? எனக் கருத்து தெரிவித்தனர்.
1. சித்த மருந்துகள் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன? 2. எத்தனை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன..?
3. என்னென்ன நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? என்பது தொடர்பாகவும், எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கபசுரக் குடிநீர் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது? என்பது தொடர்பாகவும் மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..