இலவச வேட்டி, சேலைக்கான நூலின் தரத்தை பரிசோதனை செய்யாதது ஏன்? - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய வழங்கப்படும் நூலின் தரத்தை பரிசோதனை செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
திருப்பூர் மாவட்டம், முத்தூர் விசைத்தறி நெசவாளர் சங்கத்தலைவர் கோவிந்தராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
“தமிழக அரசு இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ரூ.250 கோடி செலவில் நூல் வாங்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நூல் தரமற்றதாக உள்ளதால், இலவச வேட்டி, சேலைகளும் தரமற்றதாக உற்பத்தி செய்ய நேரிடுகிறது. இதனால், பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இலவச வேட்டி சேலைக்காக வழங்கப்படும் நூலின் தரத்தை பரிசோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கவும், தரமற்ற நூல்கள் வினியோகம் செய்வதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ‘டெண்டர் விடும்போதும், இறுதியாக இலவச வேட்டிகளை தரப்பரிசோதனை செய்யும் அதிகாரிகள் இடைப்பட்ட காலங்களில் வழங்கப்படும் நூலை தரப்பரிசோதனை செய்வதில்லை. இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடக்கிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் வி.சண்முகசுந்தர், “கொரோனா நேரத்தில் முககவசம் கூட தரப்பரிசோதனை செய்த பின்னரே வினியோகம் செய்யப்படுகிறது. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு உண்மையில்லை” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, “இலவச வேட்டி, சேலைகளை தரப்பரிசோதனை செய்யும்போது, அதற்காக வழங்கப்படும் நூலின் தரத்தை பரிசோதனை செய்யாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை செயலாளர், கைத்தறித்துறை இயக்குனர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.