சொத்து வரி விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ரஜினிகாந்துக்கு கண்டனம்: அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை
ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரி விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரி விதித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமாக ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்துக்கு 6 மாத சொத்துவரியாக ரூ.6.50 லட்சத்தை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-
உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி கொரோனா வைரசை, உலக தொற்றாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது.
இதனால் மார்ச் 24-ந்தேதி முதல் என்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபம் வாடகைக்கு விடவில்லை. இதுநாள் வரை மண்டபம் மூடிக்கிடக்கிறது.
இந்தநிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர், அரையாண்டுக்கான சொத்துவரி ரசீதை கடந்த செப்டம்பர் 10-ந்தேதி அனுப்பி வைத்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம வரையிலான 6 மாதத்துக்கு சொத்து வரியாக ரூ.6.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் என் திருமண மண்டபம் மூடிகிடக்கிறது. அதுமட்டுமல்லாமல், முன்பதிவு செய்தவர்கள் வழங்கிய ‘அட்வான்ஸ்’ தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சொத்து வரியை மாநகராட்சி ஆணையர் விதித்துள்ளார். மாநகராட்சி சட்டவிதிகளின்படி, 30 நாட்கள் கட்டிடம் மூடப்பட்டு இருந்தாலே, சொத்து வரியில் 50 சதவீதம் சலுகை பெற உரிமை உள்ளது. இந்த சலுகையை கேட்டு கடந்த செப்டம்பர் 23-ந்தேதி மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். இதுவரை என்னுடைய நோட்டீஸ் பரிசீலிக்கப்படவில்லை. இதற்கிடையில் அக்டோபர் 15-ந்தேதிக்குள் (இன்று) சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு வரி தொகையில், 2 சதவீதத்தை அபராதமாக விதிக்கப்படும். அந்த தொகைக்கு வட்டியும் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதனால், செப்டம்பர் 23-ந்தேதி நான் அனுப்பிய நோட்டீசை பரிசீலித்து முடிவு எடுக்கும்வரை சொத்து வரிக்கு அபராதம் வசூலிக்க இடைக்கால தடைவிதிக்கவேண்டும். என்னுடைய நோட்டீஸை மாநகராட்சி சட்டவிதிகளின்படி பரிசீலிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
“செப்டம்பர் 23-ந்தேதி மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு, உடனே வழக்கை தாக்கல் செய்துள்ளர்கள். உங்களது கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா? ஒருவேளை உங்களுடைய நோட்டீசை பரிசீலிக்காவிட்டால், அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் அவசரமாக ஐகோர்ட்டை நாடி உள்ளதை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் நேரத்தை வீண் அடித்ததற்காக வழக்கு செலவுடன் (அபராதத்துடன்) வழக்கை தள்ளுபடி செய்யபோகிறேன்” என்று நீதிபதி எச்சரிக்கை செய்தார்.
இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறையில் மனு தாக்கல் செய்யுங்கள். மனுவை பரிசீலித்து பிற்பகலில் உத்தரவு பிறப்பிக்கப்படும். வரி விதிப்பு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தை மீண்டும் அணுகலாம். எந்த பதிலும் இல்லாதபட்சத்தில் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரலாம்” என்று கூறினார்.
இதையடுத்து வழக்கு திரும்ப பெறுவது குறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறையில் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், வழக்கு திரும்பப்பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.