மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-13 21:45 GMT
சென்னை, 

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதற்கு அடுத்தநாள் (10-ந்தேதி) தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், வால்பாறை 11 செ.மீ., சின்னக்கல்லாறு 9 செ.மீ., சோலையாறு, நடுவட்டம் தலா 8 செ.மீ., அவலாஞ்சி, சின்கோனா தலா 7 செ.மீ., பொள்ளாச்சி, சோளிங்கர், சுருளக்கோடு, மேல்பவானி, பெரியார், பாபநாசத்தில் தலா 5 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்