தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று காணொலி காட்சி வழியாக நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
சென்னை,
42-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மன்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காணொலி வழியாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்தான விவகாரத்திற்கு ஒரு சுமுக முடிவினை காண்பதற்கு தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 27.8.2020 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க மத்திய நிதியமைச்சகம் விளக்கக்குறிப்பு ஒன்றினை மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டது. அதில், இழப்பீடு தொடர்பாக ஏற்படக்கூடிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பான முறையினை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து வரப்பெற்ற விளக்கக்குறிப்பில் இழப்பீடு தொகையினை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்தான பல வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், மத்திய அரசு கடன் பெற்று இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்பது ஒரு வழிமுறையாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக அவ்வாறு மத்திய அரசால் கடன் பெறுவது சாத்தியமில்லை என அந்த விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால், இரண்டு விருப்பத்தேர்வுகள் மட்டும் வழங்கப்பட்டன. அவ்விரண்டு விருப்பத்தேர்வுகளிலும், மாநிலங்கள்தான் கடன் பெற்றாக வேண்டிய வழிமுறை குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசு தான் கடன் பெற்று மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் விருப்ப தேர்வு ஏற்கப்படவில்லை. மத்திய அரசு தான் கடன் பெற வேண்டும் என நானும் அந்த நேரத்தில் வேண்டுகோள் வைத்திருந்தேன். முதல்- அமைச்சரும் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கடன் பெற்று தர முன் வராத காரணத்தினால், முன்வைக்கப்பட்ட 2 விருப்ப தேர்வுகளில் ஏதேனும் ஒரு விருப்ப தேர்வினை மட்டுமே தமிழகம் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.
கோவிட் 19 பெருந்தொற்று நிலவி வரும் இந்த தருணத்தில், ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனம் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் இதற்கு முன் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் 1-ம் விருப்ப தேர்வினை ஏற்க வேண்டியிருந்தது. இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வு கண்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியினை வழங்கினால், கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் பொருளாதாரத்தை உடனடியாக புதுப்பிக்க இயலும்.
சென்ற வாரம் ரூ.1,483.96 கோடி இழப்பீட்டு தொகையாக தமிழகத்திற்கு வழங்கியமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஜூலை, 2020 முடிய தமிழகத்திற்கு வரப்பெறவேண்டிய இழப்பீட்டு தொகையான ரூ.1,0774.98 கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும்.
2017-2018-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு நிலுவைத் தொகையான ரூ.4,321 கோடியை தமிழகத்திற்கு விரைவில் வழங்கிட உறுதியளித்துள்ள மன்ற தலைவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், முதன்மை செயலாளர், வணிகவரி ஆணையர் எம்.ஏ.சித்திக், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.