வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதால் கன மழைக்கு வாய்ப்பு மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-10-11 23:35 GMT
சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் ஒரு சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை லேசானது முதல் மிதமானது வரை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று பகல் 12.15 மணி நிலவரம்) கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் 9 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தலா 5 செ.மீ., தர்மபுரி மாவட்டம் அரூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தலா 4 செ.மீ,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, திருச்சி மாவட்டம் வத்தலை அணை, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், நீலகிரி மாவட்டம் குன்னூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கரூர் மாவட்டம் பாலவிடுதியில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல்) வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையும், கோடியக்கரை முதல் பழவேற்காடு வரையும் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே இந்த பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்