மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது - குஷ்பு டுவீட்

மாற்றம் தவிர்க்க முடியாது என்றும், பலரும் தன்னிடம் ஒரு மாற்றத்தை பார்ப்பதாகவும் குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-10-11 17:39 GMT
சென்னை,

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அண்மைக்காலமாக டுவிட்டரில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனையில் இருக்கும் போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்தத் தகவலை, அண்மையில் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்று ஆவேசமாக பேசிய குஷ்பு செய்தியாளர்களிடம் மறுத்திருந்தார். அத்துடன் தான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது எனவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய குஷ்பு, இன்று இரவு 9.30 மணிக்கு மீண்டும் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது பாஜகவில் இணைவது பற்றி அவரிடம் பாஜகவில் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவரது கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி அவருடன் சென்றார். 

இந்நிலையில் டெல்லி புறப்பட்டுச் சென்ற குஷ்பூ நாளை (12-ம் தேதி) பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகரிகள் சில பேரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர். வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தை கொடுக்கும்.

கனவுகள் புதியவை. லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவின்போது ஒரு புகைப்படத்தையும் குஷ்பு வெளியிட்டிருக்கிறார். அதில் காவி நிறம் போன்ற உடையை குஷ்பு அணிந்திருக்கிறார். அந்தப் பதிவிற்கு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன், புரிந்துகொண்டோம் என கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்