புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
சென்னை,
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் கடைபிடித்து பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். இதில் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று புரட்டாசி மாதத்தின் 4-வது மற்றும் கடைசி சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சென்னை
அந்தவகையில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பாரிமுனை சென்ன கேசவ பெருமாள் கோவில், மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், மாதவப்பெருமாள் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவில், தியாகராயநகர் சிவா விஷ்ணு கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், மீனாட்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், நெல்லை திருப்பதி கோவில், நெல்லை டவுன் நரசிங்கபெருமாள் கோவில், கரியமாணிக்க பெருமாள் கோவில், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோவில், உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல் நெல்லை சந்திப்பு ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதுரை
கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சாமி தரிசனம் செய்ய வரிசையாக சென்றனர். இதில் கள்ளழகர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதை போலவே கல்யாணசுந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள் சன்னதிகளிலும், இக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் பக்தர்கள் நெய் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ பெருமாளுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்களும் திரளாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கோவிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதன் வழியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதை போல அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.