கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் பார்வையிட்டனர்

கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் நேற்று அடுத்தடுத்து சென்று பார்வையிட்டனர்.

Update: 2020-10-10 23:03 GMT
திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு பல கட்டங்களாக நடந்து, பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதில் 6-வது கட்ட அகழாய்வு கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் நடைபெற்று, கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி கிருபாகரன் தனது குடும்பத்துடன் கீழடிக்கு வந்து பார்வையிட்டார். முன்னதாக நீதிபதி கிருபாகரனை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார்.

அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் காண்பித்து, அங்கு கண்டுபிடித்த பொருட்கள் குறித்து நீதிபதி கிருபாகரனுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களுக்கும் சென்று அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு கிடைத்த பொருட்களையும் பார்த்து, அதுகுறித்து கேட்டறிந்தார்.

ஒவ்வொரு அகழாய்வு எந்த மாதத்தில் தொடங்கி, எந்த மாதத்தில் நிறைவு பெறும், தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தாதது ஏன், அதற்கான அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறைகிணறையும், பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியையும் நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதற்கு அடுத்து சற்று நேரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனும் கீழடி, கொந்தகைக்கு வந்து அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டார். அவருக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவரை கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார்.

மேலும் செய்திகள்