அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-06 18:44 GMT
சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் (புதன்கிழமை) மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுதவிர வருகிற 9-ந் தேதி (நாளை மறுநாள்) அந்தமானை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (10-ந் தேதி) அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக வருகிற 9-ந் தேதி தமிழகத்தில் பல இடங்களிலும், 10-ந் தேதி சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்தமான் கடல் பகுதியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளிலும், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் 10, 11, 12-ந் தேதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்