100 அடி நீள பேனரை ஏந்தி ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்ற தொண்டர்கள்; ‘நாளைய முதல்வரே’ என கோஷமிட்டதால் பரபரப்பு

தேனி அரசு விழாவில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வத்தை ‘நாளைய முதல்வரே’ என 100 அடி நீள பேனரை ஏந்தி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-05 21:45 GMT
தேனி,

அ.தி.மு.க.வை பொறுத்தவரை முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் 7-ந்தேதி (நாளை) முதல்- அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 2-ந்தேதி சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.

பின்னர் அவர் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டிலும், பெரியகுளத்தில் உள்ள வீட்டிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், நீதிபதி, மாணிக்கம், சரவணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வி, அருப்புக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. மணிமேகலை ஆகியோரும் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து விட்டு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் 75 நகரும் நியாயவிலை கடைகளை தொடங்கி வைக்க நேற்று ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது அவருக்கு மலர்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பன்னீர்செல்வம் வாழ்க என்றும், வருங்கால முதல்வரே என்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோஷமிட்டனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம் உருவப்படம் இடம்பெற்ற ‘நாளைய முதல்வரே’ என்ற வாசகம் அடங்கிய 100 அடி நீள பேனர் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பேனரை அ.தி.மு.க. தொண்டர்கள் கையில் ஏந்தி இருந்தனர்.

அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என அறிவிக்கப்படாத சூழ்நிலையில் இந்த பேனர் வைக்கப்பட்டு இருந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் நடந்த விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி கொடியசைத்து 75 நகரும் நியாய விலைக்கடைகளை தொடங்கி வைத்தார். மேலும் தேனி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 78 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரத்து 223 மதிப்பிலான கடனுதவிகளை அவர் வழங்கினார்.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். இதில் தேனி எம்.பி. ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்