அதிமுகவில் பிரச்சினை இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுகவில் பிரச்சினையே இல்லை. அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வர் துணையாக இருக்கிறார் என அமைச்சர்கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2020-10-05 08:11 GMT


கோவில்பட்டி

கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- 

அதிமுக செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில், என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. யார் முதல்வர் என்று கேள்வி அங்கு எழவில்லை. அதிமுகவில் பிரச்சினையில்லை.

ஆனால், வெளியில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை தனது டுவீட்டர் பதிவில் துணை முதல்வர் ஓபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.அதிமுகவில் பிரச்சினையே இல்லை. அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வர் துணையாக இருக்கிறார்.

அவர் துணை முதல்வர் மட்டுமல்ல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளார். அவரை கட்சி நிர்வாகிகள் சென்று சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் பெரியகுளம் வந்திருக்கும் நேரத்தில் எளிதாக சென்று பார்க்கலாம் என கட்சி நிர்வாகிகள் சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். இதை அரசியலாக்கி பார்ப்பவர்களுக்கு அரசியலாகத் தெரியும்.

ஓ.டி.டி. என்பது மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் கூட கட்டுப்பட்டது அல்ல. இது உலகளாவிய பிரச்சினை. கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்படாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவர்களது பொருளாதாரத்தின் அடிப்படையில் ஓ.டி.டி யில் திரைப்படங்களை வெளியிட்டனர்.

இது கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக ஏற்பாடாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.தற்காலிகமாக இருந்தால் மகிழ்ச்சி. நிரந்தரமாக இருந்தால் திரையரங்குகள் பாதிக்கப்படும். திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம். திரைப்படத்துறையினர் கலந்துபேசி வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு வரும் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்