சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 6 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி ஒதுக்கீடு

சிவில் சர்வீசஸ் வேலைக்கான நியமன உத்தரவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கி உள்ளது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 6 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 20 பேருக்கு மற்ற வேலைகளுக்கான ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2020-10-01 23:59 GMT
சென்னை,

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ‘மனிதநேய மையம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்’ சார்பில் கடந்த 14 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் பணிகள் உள்பட பல்வேறு மத்திய, மாநில அரசு பணிக்களுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 3 ஆயிரத்து 534 பேர் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு பணிகளில் உயர் பதவிகளில் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2019-20-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி நடைபெற்றது. தேர்வு முடிவு 2019 ஜூலை மாதம் 12-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு 2019 செப்டம்பர் 20-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

இதன் முடிவு இந்த ஆண்டு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வெளியிடப்பட்டது. இறுதித் தேர்வான நேர்முக தேர்வு டெல்லியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி தொடங்கியது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீதம் உள்ளவர்களுக்கு ஜூலை 20-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நேர்முக தேர்வு நடைபெற்றது. நேர்முக தேர்வின் முடிவு ஆகஸ்டு 4-ந்தேதி வெளியானது.

இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 13 மாணவர்களும், 16 மாணவர்களும் வெற்றி பெற்றனர். நேற்று அவர்களில் 26 பேருக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பணி ஒதுக்கீடு உத்தரவை வழங்கியது. அதன்படி ஐ.ஏ.எஸ். பணி 4 மாணவிகள், 2 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.ஆர்.டி.எஸ்., ஐ.டி.எஸ்., ஐ.டி.ஏ.எஸ்., ஐ.சி.ஏ.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ். ஆகிய பணிகளுக்கான ஒதுக்கீடு ஆணை 20 பேருக்கு வழங்கப்பட்டது.

டெல்லியில் நடந்த நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்காக மாணவ-மாணவிகளுக்கான விமான பயண செலவு, தங்கும் வசதி மற்றும் அனைத்து தேவைகளுக்கான செலவுகளையும் மனிதநேய மையமே ஏற்றுக்கொண்டது.

மேற்கண்ட தகவல் மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்