அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 962 மகளிர் குழுக்களுக்கு ரூ.54 கோடியே 24 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று கடனுதவிகளை வழங்கினர். ஊரடங்கு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வங்கிகளுக்கான விருதினையும் வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-
"திமுகவினர் இந்த அரசை வேண்டும் என்றே குறைகூறிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.