இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் - பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய 16 உறுப்பினர்கள் கொண்ட ஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆய்வுக் குழுவில், இதில் தமிழர்கள் யாரும் இல்லை என்பது தமிழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற வேண்டும். மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு நீங்கள் மகாபலிபுரம் வந்த போது வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை பார்வையிட்டீர்கள். தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது. எனவே 16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.