கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2020-09-23 04:15 GMT
சென்னை,

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒன்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வரை கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த வார்டில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலமாக குழிதோண்டும் பணியின்போது பூமிக்கு அடியில் சென்ற பிரதான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் மின்தடை ஏற்பட்டது. அப்போது அந்த வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் முருகானந்தபுரத்தை சேர்ந்த 67 வயது பெண் மற்றும் வெங்கடேசபுரத்தை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர்.

இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் வள்ளி கூறும்போது, “ஆக்சிஜன் இணைப்புக்கும், மின்சார தடைக்கும் சம்பந்தமில்லை. மின்தடை ஏற்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தொடர்ந்து வழங்கப்பட்டது. இதற்காக இன்வெட்டர் இணைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் செல்வதில் எந்த தடையும் ஏற்பட வாய்ப்பு இல்லை” என்றார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டிய அதிமுக அரசு, கொல்லும் அரசாக மாறிவிட்டதாக, ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் ஆக்சிஜன் தடைபட்டதே மரணத்துக்குக் காரணம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது என்றும், கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகி விட்டது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்