மத்திய அரசு கொண்டு வந்தது விவசாயிகள் நலன் காக்கும் சட்டம்: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மத்திய அரசு கொண்டு வந்தது விவசாயிகள் நலன் காக்கும் சட்டம் என்றும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு எதிர்க்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-09-22 23:02 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உங்களை விவசாயி என்று சொல்லக்கூடாதென்ற கருத்தை சொல்லியுள்ளதற்கு உங்கள் கருத்து என்ன?

பதில்:- இந்த ஆட்சியில் எந்த குறையையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால், விவசாயிகளுக்காக காவிரி-குண்டாறு எனும் மிகப் பெரிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நான் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். குடிமராமத்து திட்டம் கொண்டு வந்துள்ளோம். தடுப்பணைகள் கட்டிக்கொடுத்துள்ளோம். நான் ஒரு விவசாயியாக இருக்கின்ற காரணத்தால்தான் இவ்வளவு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். எனவே, நான் விவசாயி என்று அவர் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், இன்றும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். நான் விவசாயி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். விவசாயத்தை பற்றி ஏதும் தெரியாதவரிடம் கேட்டால் அப்படித்தான் சொல்வார்.

கேள்வி:- வேளாண் மசோதாவில் தமிழ்நாடு அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன?

பதில்:- இதுகுறித்து நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். விவசாயிகள் நலன் காக்க 3 சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கின்ற காரணத்தால்தான் அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை ஆதரித்தது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் ஆதரிப்போம். அதேவேளையில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு எதிர்க்கும். இதுதான் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

விளைநிலங்கள் நிறைந்த டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது யார்? முதன்முதலில் கொண்டு வந்ததே மு.க.ஸ்டாலின்தான். அவர்தான் துவக்கி வைத்தார். அதை முடிவிற்கு கொண்டு வந்தது யார்? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அ.தி.மு.க. அரசு. விவசாயிகளை பாதுகாத்தது அ.தி.மு.க. அரசு. மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தது மு.க.ஸ்டாலின். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசுடன் வாதாடி, போராடி அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை நாங்கள் உருவாக்கி தந்திருக்கிறோம். விவசாயம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.

ஆனால், மு.க.ஸ்டாலின் அந்த திட்டங்கள் வருவதற்கு முனைப்பு காட்டியவர், அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டவர். அதை மறைக்கவும் முடியாது, விவசாயிகள் மறக்கவும் மாட்டார்கள்.

கேள்வி:- எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளாரே...?

பதில்:- அதற்கு நாங்கள் விளக்கம் கேட்கப்போகிறோம். ஏனென்றால் அவரே என்னுடைய கருத்தைப் பதியவைக்கிறேன் என்று சொல்லியுள்ளார். இருந்தாலும் அதற்கு விளக்கம் கேட்கப்படும்.

கேள்வி:- சசிகலா சிறையில் இருந்து வெளிவந்து அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட நினைத்தால்...?

பதில்:- தற்பொழுது இந்த கேள்வி எழத் தேவையில்லை. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடத்த வந்துள்ளேன். அதில் இருந்து ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்.

கேள்வி:- ஜெயலலிதா ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அறிவித்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கிடப்பில் இருக்கிறதே?

பதில்:- ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை படிப்படியாக நாங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் நிதி தேவை. ஒரே காலக்கட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது. ஒவ்வொரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு எடுத்து செயல்படுத்தி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


“அ.தி.மு.க. ஜோதிடம் பார்ப்பதில்லை; மக்களைத்தான் பார்க்கிறோம்”


மதுரை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர், 8 மாதத்தில், 6 மாதத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும் என்று சொல்கிறார், ஏற்கனவே 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று சொன்னார், இது குறித்து...

பதில்:- அவர் ஜோதிடம் பார்க்கிறாரென்று நினைக்கிறேன். நாங்கள் ஜோதிடம் பார்ப்பதில்லை, மக்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மக்களிடத்தில்தான் இருக்கிறது, மு.க.ஸ்டாலினிடம் அல்ல.

கேள்வி:- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இறந்திருக்கிறார்கள்?.

பதில்:- அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் சொல்லும் கருத்து சரியாக, தவறா என்று செய்தி வரவில்லை. அங்கு இதுபோன்று ஒரு சம்பவம் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- 20 மணி நேரத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே? உங்கள் நிலைபாடு என்ன?

பதில்:- இப்படி ‘பில்டப்’ செய்ய வேண்டியதுதான். நாங்கள் மக்களுக்கு என்னென்ன திட்டங்களை செய்தோம் என்று சொல்கிறோம். அவர், உறுப்பினர்களை சேர்த்தோம் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்