பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் பெண் சார் பதிவாளர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்

திருத்தணி பத்திர பதிவு அலுவலகத்தில் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-09-22 21:15 GMT
பள்ளிப்பட்டு,

திருத்தணி பத்திர பதிவு அலுவலகத்தில் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து இந்த அலுவலகத்தை சேர்ந்த பெண் சார் பதிவாளர் உள்பட 3 பேரை பத்திர பதிவு செயலாளர் பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோட்டில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய கட்டாய வசூல் நடப்பதாகவும், அனுமதி பெறாத மனைகளை பணம் கொடுத்தால் பத்திர பதிவு செய்வதாகவும் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சில தினங்களுக்கு முன் திருத்தணி பத்திர பதிவு அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தையும், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினார்கள்.

கைப்பற்றப்பட்ட பணத்தையும், ஆவணங்களையும் திருவள்ளூர் லஞ்சஒழிப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து பத்திர பதிவுத்துறை செயலாளர் அதிரடி பணியிட மாற்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவில் திருத்தணி பத்திர பதிவு அலுவலக பெண் சார்பதிவாளர் கவிதா (பொறுப்பு) வாலாஜாபாத் பத்திர பதிவு அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் இந்த அலுவலகத்தை சேர்ந்த இளநிலை உதவியாளர் புருஷோத்தமன் ஊத்துக்கோட்டை பத்திர பதிவு அலுவலகத்திற்கும், அலுவலக உதவியாளர் சீனிவாசன் திருவள்ளூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்