சென்னை கெல்லீசில் சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்கு இல்ல கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை கெல்லீசில் சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்குஇல்ல கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2020-09-20 23:18 GMT
சென்னை,
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீன்வளத்துறை சார்பில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன் விற்பனை கூடம், திருவள்ளூர் மாவட்டம் அண்ணாமலைச்சேரி கிராமத்தில் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் சென்னை, கெல்லீசில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பில் தங்கும் அறைகள், தொழிற்பயிற்சி கூடம், பணியாளர் அறை, சமையலறையுடன் கூடிய உணவருந்தும் கூடம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்குஇல்லக் கட்டிடத்தையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்திடும் நோக்கில் தற்போது பயன்பாட்டில் உள்ள இணையதளம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பன்மொழி திறனாய்வு மற்றும் மின்ஆளுமை தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை, காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் நிலை 2-ன் ஒரு பகுதியாக, ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், வி.சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன், நிலோபர் கபில், தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்