உற்பத்தியான பொருட்களை இணையவழியில் சந்தைப்படுத்துவது குறித்த ஆன்லைன் பயிற்சி: மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் ஏற்பாடு
உற்பத்தியான பொருட்களை இணையவழியில் சந்தைப்படுத்துவது குறித்த ஆன்லைன் பயிற்சியினை மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை,
உற்பத்தி செய்யும் பொருட்களை இணையவழியில் சந்தைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் ஆன்லைனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் வாரம் ஒருமுறை தொழிற்பயிற்சிகளை பெண்களுக்காக கட்டணம் இல்லாமல் நடத்தி வருகிறது. நோய்த்தொற்று சூழலினால் நேரடியாக தொழில் பயிற்சி அளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, ஆன்லைன் மூலமாக டிசம்பர் மாதம் இறுதிவரை ‘பயிற்சி வளர்ச்சி’ என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் இந்த வாரம் இணையவழி சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி) பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. மார்க்கெட்டிங் சம்பந்தமான பலவித பிரச்சினைகளை பெண்கள் சந்தித்து வரும் இந்த காலகட்டத்தில் இணையவழி சந்தைப்படுத்துதல் பயிற்சி அதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்று இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
எந்த தொழில் செய்தாலும் கட்டணமின்றி அல்லது குறைந்த செலவில் அதிகம் பேருக்கு எவ்வாறு அந்த தொழிலை விளம்பரப்படுத்தலாம் என்றும், நமது கையில் இருக்கும் தொலைபேசி மூலம் நாம் இருக்கும் இடம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எவ்வாறு அதனை சந்தைப்படுத்தலாம்? என்றும், மேலும் வீட்டில் இருந்தே இதையே தொழிலாக பிறருக்கு செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம் என்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த பயிற்சியில் கற்றுத்தரப்படும்.
ஒவ்வொரு பெண்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இணையவழி சந்தைப்படுத்துதல் எப்படி? என்பதை தெரிந்து பயன்பெறலாம். இந்த ஆன்லைன் பயிற்சி மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய ஆன்டிராய்டு செல்போனில் form.wewatn.com/ ஐ.டி. எண்: 86231288454 மூலமாக பயிற்சியை நேரடியாக கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் பெண்கள் வீட்டில் இருந்தபடி தங்களுக்கு தேவையான பயிற்சிகளை கற்றுக்கொண்டு தொழில் தொடங்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.