ஆன்லைன் மூலமாக அண்ணா பல்கலைக்கழக மாதிரி செமஸ்டர் தேர்வு தொடங்கியது மாணவர்கள் சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சிக்கல்

அண்ணா பல்கலைக்கழக மாதிரி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது. மாணவர்கள் சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சிக்கல் உண்டானது.

Update: 2020-09-20 00:15 GMT
சென்னை,

என்ஜினீயரிங் படிப்பு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22-ந்தேதி(நாளை மறுதினம்) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. 22-ந்தேதி புராஜெக்ட், நேர்காணல் தேர்வும், 24-ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வும் நடக்கிறது.

முதல் முறையாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட இருப்பதால், மாணவர்கள் அதுபற்றி தெரிந்து கொள்வதற்காக மாதிரி தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து இருந்தது.

அதன்படி நேற்று மாதிரி தேர்வு தொடங்கியது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெற உள்ளது. இந்த 2 நாட்களிலும் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நடக்கும் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம்.

செமஸ்டர் தேர்வு காலை 10 மணி முதல் 11 மணி வரை, மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதேபோல் தான் மாதிரி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. கொள்குறி வகை வினாக்கள் என்பதால் மாணவர்கள் இந்த தேர்வை ஆன்லைனில் எழுதுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே தெரிவித்தது.

மாதிரி தேர்வு சரியான நேரத்துக்கு தொடங்கப்பட்டாலும், மாணவர்கள் சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சிக்கல் உண்டானது. ‘வெப் கேமரா’ சரிவர செயல்படாமல் போனது, சிலருக்கு ‘பிரவுசர்’ சரியாக இல்லை என்ற தகவல் வந்தது.

இருப்பினும் பல மாணவர்கள் மாதிரி தேர்வை சரியாக எழுதினர். அவர்கள் சரியாக எழுதியதை சம்பந்தப்பட்ட பேராசிரியர்களுக்கு ‘ஸ்கிரீன்சாட்’ எடுத்து அனுப்பினார்கள்.

நேற்று முன்தினம் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடங்கப்படாமலேயே போனது. 2-வது நாளாக நேற்று மாதிரி தேர்வு சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிலையில், விடைத்தாள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு நடப்பதால் இதுபோன்ற சிக்கல்கள், பிரச்சினைகள் வருவது இயல்பு தான். தேர்வு நடக்கும் நேரத்தில் அதுபோல் பிரச்சினைகள் ஏற்படாமல் சரிசெய்யப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்