மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 10 ஆயிரம் வழக்குகள் வரை தாக்கல்: லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா? மதுரை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதுடன், மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 10 ஆயிரம் வழக்குகள் வரை கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தது.;

Update: 2020-09-14 23:30 GMT
மதுரை, 

மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதுடன், மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 10 ஆயிரம் வழக்குகள் வரை கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள பட்டா நிலங்களில் சவடு மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கடந்த 28.8.2019 அன்று உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சவடு மண் எடுக்க, உவரி மண் எடுக்க என அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி ஏராளமானவர்கள் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சவடு மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதித்தும், அதை மீறி எதன் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது? இதுவரை மணல் கடத்தல் வழக்குகள் எத்தனை பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தது. மேலும் மணல் கடத்தல் வழக்குகளை மதுரை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.


இந்தநிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி, “பட்டா நிலங்களில் சவடு மண் எடுக்க அனுமதி வழங்க மதுரை ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது” என்று தெரிவித்தார்.


இதையடுத்து நீதிபதிகள், “மணல் கடத்தல் சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரிகள் போன்றவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா? மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்களா? அதிகபட்சமாக இந்த விவகாரத்தில் போலீசார் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. டாஸ்மாக் மது விற்பனையை அரசே ஏற்று நடத்துவதை போல் மணல் விற்பனையையும் அரசு ஏற்று நடத்தினால் என்ன?” என கேள்வி எழுப்பினர்.

மேலும் “மணல் கடத்தல் சம்பந்தமாக தாக்கல் செய்யப்படும் பதில் மனுக்கள், இந்த கோர்ட்டை திருப்திப்படுத்தும் வகையில் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் வழக்குகள் வரை மணல் கடத்தல் சம்பந்தமாக கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படுகின்றன” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மணல் கடத்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் பிறப்பித்துள்ள உத்தரவுகளை இதுவரை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. மணல் கடத்தலை தடுக்க அறிவியல்பூர்வமாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகளை இந்த சிறப்பு அமர்வு தொடர்ந்து விசாரிக்கும்‘ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்