டெல்டாவில் எண்ணெய் கிணறுகள் அமைக்க 2013ல் அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது - டாகடர் ராமதாஸ்

டெல்டாவில் எண்ணெய் கிணறுகள் அமைக்க 2013ல் அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-13 08:25 GMT
சென்னை,

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"காவிரி பாசன மாவட்டங்களில் 8 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்காக அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியாகவுள்ள நிலையில், அந்த அனுமதியை 2023-ம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை பிறப்பித்திருக்கிறது. விவசாயிகளின் நலனை பாதிக்கும் வகையிலான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதியில் 24 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு கடந்த 2013-ம் ஆண்டில் அனுமதி அளித்தது.

அவற்றில் 16 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 8 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்த கிணறுகளை அமைப்பதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி விரைவில் காலாவதியாகவுள்ளது.

அதை நீட்டித்து வழங்கும்படி ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தது. அதையேற்று 8 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை 2023-ம் வரை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆணையிட்டிருக்கிறது. இது சரியல்ல.

காவிரி பாசன மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஏற்கெனவே, 200-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ளது. அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதில் வெற்றியும் பெற்றது.

பாமக கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசு, இப்போது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களைத் தவிர புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தடையும் விதித்தது.

ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த எந்த விதிகளையும் மதிக்காமல், ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க முயல்வதும், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் துணை போவதும் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத துரோகங்களாகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் 24 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2013-ம் ஆண்டில் அனுமதி அளித்தது உண்மை தான். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தத் திட்டங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், அவை காலாவதியானதாகவே கருதப்பட வேண்டும். இதுவரை அமைக்கப்படாத 8 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரினால், அவை புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும்.

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகளின்படி புதிய தொழிற்திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்பதால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, ஓஎன்ஜிசி 8 கிணறுகளை அமைக்க அனுமதி அளித்திருப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யப்படும் கேடாகும். இது சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதையே சிதைக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தும் எந்த திட்டங்களுக்கும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை. இது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வெகுமதி அளிப்பது போன்று, 8 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க அனுமதி அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏற்கெனவே காவிரி பாசன மாவட்டங்கள் கடும் வறட்சியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு வேளாண் சாகுபடி பரப்பும் குறைந்து வரும் இந்த நிலையில், தற்போது புதிதாக செயல்படுத்தப்படவுள்ள இந்தப் புதிய எண்ணெய் கிணறுகள் திட்டம், காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும். இதைத் தடுக்க வேண்டும்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 8 எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அளிக்கப்பட்ட ஆணையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்