குவைத்தில் வேலை இன்றி தவித்த 11 தமிழர்கள் மனஉளைச்சலில் தற்கொலை செய்யலாமா? என நினைத்ததாக வேதனை

கொரோனா ஊரடங்கால் குவைத்தில் வேலை இன்றி தவித்த 11 தமிழர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளலாமா? என நினைத்ததாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2020-09-12 23:28 GMT
ஆலந்தூர்,

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் ராஜரத்தினம், செல்வம், சதீஷ், சுந்தரரசு, புதுக்கோட்டையை சேர்ந்த அஜீத், கேசவ செந்தில், விழுப்புரத்தை சேர்ந்த ராஜமணி, மணிமாறன், மணிகண்டன், அரியலூரை சேர்ந்த கலியபெருமாள், ராமநாதபுரத்தை சேர்ந்த நாகூர்கனி ஆகியோர் குவைத்தில் ஒரு நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் குவைத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் 11 பேரும் வேலை வாய்ப்பை இழந்தனர். நிறுவன இருப்பிடத்தில் உணவு, குடிக்க தண்ணீர்கூட இல்லாமல் பரிதவித்தனர். தன்னார்வ அமைப்பினர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் கட்டுமான நிறுவனத்திடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பெற்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குவைத்தில் பரிதவித்த தமிழகத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்களையும் சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இதையடுத்து குவைத்தில் இருந்து டெல்லி வழியாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரும் சென்னை வந்தனர். விமான நிலையம் வந்த அவர்களை தமிழக அரசின் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நல ஆணையக கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் 11 பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதியை தமிழக அரசு சார்பில் செய்து தரப்பட்டது. சென்னை திரும்பிய அவர்கள், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

குவைத்தில் வேலை செய்த கட்டுமான நிறுவனத்தில் கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்தோம். சாப்பிடகூட வசதி இல்லாமல் அவதிப்பட்டோம். குடிநீர், மின்சார வசதிகளையும் துண்டித்துவிட்டனர். பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களையும் தராமல் மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் தற்கொலை செய்துகொள்ளலாமா? என்ற எண்ணமும் ஏற்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக சொந்த ஊருக்கு வந்து உள்ளோம். வேலை செய்த பணமும் கிடைக்கவில்லை. எங்களை சென்னை அழைத்து வர உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்