மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை: மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மனவேதனை அளிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-12 09:08 GMT
சென்னை,

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரையில் இன்று ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாக பேசிய ஆடியோவில் கூறியுள்ளார். கடந்த வாரம் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே நீட் தேர்வு பெரும் மன அழுத்ததை ஏற்படுத்துவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்