‘கோவிட்-19’ சிறப்பு நிதியுதவி திட்டத்தில் 1½ லட்சம் பேர் பயன்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
‘கோவிட்-19’ சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் மூலம், 1 லட்சத்து 63 ஆயிரத்து 694 பேர் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, கிண்டி சிட்கோ வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக புத்தாக்க திட்டத்தின் புதிய அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் திறந்துவைத்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வந்த தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகம் தற்போது கிண்டியில் அமைந்துள்ள சிட்கோ வளாகத்தின் 5-வது தளத்தில் புதுப்பொலிவுடன் செயல்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிராமப்புற மக்களை வறுமை மற்றும் கடனில் இருந்து பாதுகாக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டத்தின் மூலம் ரூ.300 கோடி மதிப்பில் ‘கோவிட்-19’ சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.254.94 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு, 1 லட்சத்து 63 ஆயிரத்து 694 பேர் பயனடைந்துள்ளனர்.
தனிநபர் தொழில் முனைவோருக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் கடன் உதவியாக ரூ.159.6 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு, 49 ஆயிரத்து 652 பேர் பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 3-ம் பாலினத்தவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.49.88 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு 33 ஆயிரத்து 603 பேர் பயனடைந்துள்ளனர். புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன்பெற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.20.47 கோடி வழங்கப்பட்டு 2 ஆயிரத்து 52 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
செயல்பாட்டில் உள்ள 1,270 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.19.05 கோடியும், 201 தொழில் குழுக்களுக்கு ரூ.3.01 கோடியும், 29 உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு ரூ.2.09 கோடியும், ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மூலதன மானியம் வழங்கப்பட்டு பலர் பயனடைந்துள்ளனர். திட்ட பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.83 லட்சம் செலவில் 417 பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்ட தலைமைச் செயல் அதிகாரி ச.ப.கார்த்திகா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.