தமிழகத்தில் 7 ஆயிரம்,8 ஆயிரம் என்று இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.120.23 கோடி மதிப்பில் 43 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதே, அரசின் நடவடிக்கைக்கு சான்றாகும்.
சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நோய்ப்பரவலை தடுக்க தவறிவிட்டதாக சொல்கிறார்கள். கொரோனா நோய்ப்பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிப்பை படிப்படியாக குறைத்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89% பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததால் இறப்பு எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளோம்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர். மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள்வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறி வருகின்றன. இறப்பு எண்ணிக்கையும் தினமும் குறைந்துவருகிறது.
100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் பாதியளவுக்கு குறைந்துவிட்டது. நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
மருத்துவர்கள்,செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம்,செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.