தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம், பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலா 21 செ.மீ., நாமக்கல் 13 செ.மீ., பென்னாகரம், அகரம் சிகூர் தலா 8 செ.மீ., உளுந்தூர்பேட்டை, கலசப்பாக்கம், சேந்தமங்கலம், செய்யாறு, வால்பாறை தலா 7 செ.மீ. மழை பதிவுவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.