தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக் கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், படிக்கும் போதே மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக் கும் வகையிலும் இந்த புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்து வழங்கிய இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும். புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.