‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை: கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிராம மக்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன்-தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் விக்னேஷ் (வயது 19). இவர் டாக்டராக வேண்டும் என்ற கனவில் சிறுவயது முதலே கடினமாக படித்து வந்தார்.
செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த விக்னேஷ், பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர், டாக்டராக வேண்டும் என்ற ஆசையில் கேரளாவில் உள்ள பயிற்சி மையம் மற்றும் துறையூரில் ஒரு நிறுவனத்திலும் ‘நீட்’ தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.
இரண்டு முறை ‘நீட்’ தேர்வு எழுதி ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சி பெற்ற நிலையிலும் டாக்டர் சீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 3-வது முறையாக ‘நீட்’ தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்தார். வருகிற 13-ந்தேதி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளதால் இரவு, பகல் பாராது படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என்று கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்னேஷ் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர்.
பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார். ‘நீட்’ தேர்வு குறித்து மனஉளைச்சலில் இருந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உறவினர்கள் கிணற்றில் இருந்து விக்னேஷ் உடலை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ‘நீட்’ தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் காட்டு தீ போல பரவியது. அதனை தொடர்ந்து கிராம மக்களும், பா.ம.க.வினரும் அங்கு குவிந்தனர். அவர்கள் திடீரென அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கிராமப்புற மாணவர்களின் உயிரை குடிக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயிர் இழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். உடலை எடுக்க வந்த ஆம்புலன்சையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மனுவை கோரிக்கையாக எழுதி கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட விக்னேஷின் தந்தை விஸ்வநாதன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு வினோத் (16) என்ற தம்பியும் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் குளுமூரில் மாணவி அனிதா ‘நீட்’ தேர்வு விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தற்போது மாணவர் விக்னேஷின் தற்கொலை அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.