அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா: சிகிச்சைக்காக சொந்த ஊரில் இருந்து சென்னை விரைந்தார்

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-09-08 21:50 GMT
சென்னை, 

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழக அமைச்சர்களில் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, நிலோபர் கபில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே, அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேவூர் அவரது சொந்த ஊராகும். இன்று (புதன்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். எனவே, அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நேற்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்து வந்தார்.

அதற்குள் கொரோனா பரிசோதனை முடிவும் வந்ததால், உடனடியாக அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று இரவு அங்கிருந்து விரைந்தார். ஏற்கனவே, கடந்த வாரம் அவரது கார் டிரைவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தமிழக அமைச்சர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6-வது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆவார்.

மேலும் செய்திகள்