கடன் வழங்குவதில் கொண்டு வரப்படும் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

கடன் வழங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்படும் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-09-08 23:00 GMT
சென்னை, 

கடன் வழங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்படும் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னுரிமை பிரிவுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக 4-ந் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முதன்மை உத்தரவுகள், மிகுந்த குழப்பமான மற்றும் பாரபட்சமான அம்சங்களை கொண்டுள்ளன. குறிப்பாக அந்த உத்தரவின் 7-ம் பிரிவு, குறைந்த கடன் பெறும் மாவட்டங்களின் முன்னுரிமை பிரிவுகளுக்கு கடனை வழங்க வகை செய்கிறது.

இதன் முகாந்திரம் ஆட்சேபனைக்கு உரியதல்ல. ஆனால் இந்த கட்டமைப்பில் பல மாவட்டங்கள் கடன் பெற முடியாமல் போகின்றன என்பது ஆட்சேபனைக்கு உரியதாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுமே முன்னுரிமை பிரிவில் அதிக கடன் பெறும் மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வேறு எந்த மாநிலத்திலுமே ஊக்கத்தொகை பெறாத மாவட்டங்களாக இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மாவட்டங்கள் வகைப்படுத்தப்படவில்லை. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் திட்டத்தில் இருந்து தமிழக மாவட்டங்கள் விலக்கப்பட்டதாக தெரிகிறது.

குறைந்த கடன் பெறும் மாவட்டங்களுக்கு அதிக கடனை அளிக்கலாமே தவிர, மற்ற மாவட்டங்கள் பெறக்கூடிய கடனை அந்த மாவட்டங்களுக்கு திருப்பக்கூடாது.

தமிழக மாவட்டங்களில் அதிக கடன் பரிமாற்றம் உள்ளது. கடின உழைப்பு, விடாமுயற்சி, வீடு மற்றும் தொழில்களுக்கான கடனை சரியான நேரத்தில் திரும்ப அளிப்பது ஆகிய அம்சங்கள் இங்கு அதிகம் உள்ளது. எந்த நோக்கத்துக்கு கடன் வாங்கினார்களோ அதையே செயல்படுத்துகின்றனர்.

விதியை சரியாக பின்பற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் கடனை வேறு திசைக்கு திருப்பி அவர்களை தண்டிக்கக்கூடாது. நாட்டில் பொருளாதார விரிவாக்கத்துக்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

எனவே ரிசர்வ் வங்கியின் இந்த கொள்கை நியாயமற்றதாகவும், பிற்போக்கு தன்மை உடையதாகவும் உள்ளது. உடனடியாக அதை திரும்பப்பெற வேண்டும். சட்டத்தை மதித்து கடின உழைப்பை மேற்கொண்டு, கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தும் கடனாளிகளுக்கு மேலும் கடனளித்து ஊக்கமளிக்க வேண்டும்.

கொரோனாவால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தடை இல்லாத கடன் வழங்குதல்தான் இங்குள்ள பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் வரவை தடுக்கும் நடவடிக்கைகளை நீக்க வேண்டும்.

எனவே, இதுபோன்ற முடிவை உடனடியாக திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கிக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். முன்னுரிமை பிரிவுக்கு தடையில்லாமல் கடன் கிடைக்கும் நிலை நீடிக்கும் வகையில் இதற்கு முன்பிருந்த மதிப்பீட்டு முறையை (கடனை திருப்பி செலுத்தும் தன்மையை கணிக்கும் வெயிட்டேஜ் முறை) மீட்டமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்