கிசான் வங்கி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடித்து நிதி மீட்கப்படுகிறது - எடப்பாடி பழனிசாமி பேட்டி

கிசான் வங்கி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டுபிடித்து நிதி மீட்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-07 22:33 GMT
சென்னை, 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கிசான் வங்கி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?.

பதில்:- கிசான் வங்கி திட்டம் மூலம் மத்திய அரசாங்கம் சில சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கியது. அதை சிலர் தவறாக பயன்படுத்திவிட்டனர். இப்போது அ.தி.மு.க. அரசு, தவறு நடந்ததை குழு அமைத்து, அதை கண்டுபிடித்து மீட்டு வருகிறது. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது.

கேள்வி:- சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி தூர்வாரப்படாமல் இருக்கிறதே?.

பதில்:- பூண்டி ஏரியில் இருந்து மணல் அள்ள டெண்டர் போடப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனால் பணி நடைபெறவில்லை. ஏரியில் படிந்திருந்த மண்ணை எடுத்தால் சுமார் ரூ.200 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கும். அதை நிறுத்திவிட்டார்கள். நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். எனவே, நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்