சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு முன் ஜாமீன்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-07 22:09 GMT
மதுரை, 

ஸ்டூடியோ கிரீன் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஆண்டு மகாமுனி என்ற சினிமாவை தயாரித்தோம். இந்த படத்தின் தியேட்டர் உரிமையை நீதிமணி என்பவர் பங்குதாரராக இருந்த தருண் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றது. இதற்காக ரூ.6 கோடியே 25 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டது. முதல்கட்டமாக ரூ.2 கோடியே 30 லட்சம் வழங்கினார். மீதி தொகையை கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதனால் அந்த நிறுவனம் மீது சினிமா துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் என் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து ராமநாதபுரம் போலீசார் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதாவது நிதி நிறுவனத்துக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக ராமநாதபுரத்தை சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரில் நீதிமணி மற்றும் சிலருடன் எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்பேரில் என் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே ராமநாதபுரம் பஜார் போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கியும், போலீசார் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஞானவேல்ராஜாவை கைது செய்ய ஐகோர்ட்டு தடை விதித்தது. மேலும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அந்த தடை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் விஜயன்சுப்பிரமணியன் ஆஜராகி, “மகாமுனி படத்திற்கான தியேட்டர் உரிமத்திற்காகவே ரூ.6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.2.2 கோடி முன்பணமாக பெறப்பட்டது. அதன்பேரில் அந்த படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கிற்கும் மனுதாரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை“ என வாதாடினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வணிக நோக்கத்திலேயே மனுதாரர் சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இருந்தபோதும் ராமநாதபுரம் போலீசார் விசாரணைக்கு அழைத்தால் மனுதாரர் ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி, ஞானவேல்ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்