5 மாதங்களுக்கு பிறகு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன: மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம்
5 மாதங்களுக்கு பிறகு வெளி மாவட்டங்களுக்கு நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். சிறப்பு ரெயில் சேவையும் நேற்று தொடங்கியது.
சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 8-ம் கட்ட ஊரடங்கு இந்த மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் 7-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையேயும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 4-ந் தேதி தொடங் கியது. அந்தந்த கோட்ட நிர்வாகங்கள் சார்பிலும் வெளியூர் பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. செல்போன் செயலி மூலமாகவும், ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு நடந்தது. பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் சேவை நேற்று முதல் தொடங்கியது. வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் மார்ச் மாதத்துக்கு பிறகு பஸ் நிலையங்களில் நேற்று இயல்புநிலை திரும்ப தொடங்கியதை காண முடிந்தது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று வெளியூர்களுக்கு விரைவு பஸ்கள் புறப்பட்டு சென்றன.
இதற்காக நேற்று அதிகாலை முதலே பயணிகள் பஸ் நிலையத்துக்கு ஆர்வத்துடன் வந்தனர். உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பின்னரே பஸ் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். டிக்கெட் முன்பதிவு செய்திருந்த, முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே உள்ளே சென்றனர். பயணிகளின் வசதிக்காக நடைமேடைகளில் ஆங்காங்கே உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
மேலும் பஸ்கள் புறப்படும் விவரம் குறித்த தகவல் பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. டிக்கெட் கவுண்ட்டரிலும் நேற்று காலை பயணிகள் டிக்கெட் பெற்று பயணம் செய்தனர். பஸ்சில் ஏறும் முன்பு மீண்டும் ஒருமுறை பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. கைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
44 பேர் அமரும் வசதி கொண்ட அரசு விரைவு பஸ்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 26 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் விழுப்புரம் உள்ளிட்ட அந்தந்த கோட்ட போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட வெளியூர் பஸ்களிலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து சென்ற பஸ்களில் மக்கள் உற்சாகத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இதேபோல் கோவை, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் போன்ற ஊர்களில் இருந்தும் பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன. வெளி மாவட்ட நகரங்களில் இருந்தும் அந்த ஊர்களுக்கு பஸ்கள் வந்தன.
பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக முககவசம் மற்றும் கையுறை அணிந்து இருந்தனர்.
தமிழகத்தில் அரசு விரைவு பஸ்களை பொறுத்தவரையில் 1,184 பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. சென்னை தவிர பிற போக்குவரத்து கோட்டங்கள் சார்பில் 200 பஸ்கள் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று 800 பஸ்கள் இயக்கப்பட்டன.
அரசு விரைவு பஸ்களில் ஒரு ‘சீட்’ இடைவெளியில் பயணிகள் அமர்ந்து இருந்தனர். அதாவது இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்தார்.
இதர போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்பட்ட சாதாரண அரசு பஸ்களில் 3 இருக்கைகள் கொண்ட வரிசையில் இடைவெளி விட்டு 2 பேரும், 2 இருக்கைகள் கொண்ட வரிசையில் ஒருவரும் அமர்ந்து பயணித்தனர்.
வெளி மாவட்டங்களுக்கு செல்ல 5 மாதங்களுக்கும் மேலாக பஸ் வசதி இன்றி தவித்த மக்கள், நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில மாதங்களாக வெளியூர் பயணம் மேற்கொண்டவர்களில் கணிசமான பேர் வாடகை கார்களிலேயே சென்றனர். இதற்கு அதிகம் செலவானது. இப்போது பஸ்கள் ஓடத் தொடங்கி இருப்பதால் மக்கள் குறைந்த கட்டணத்தில் சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே 13 வழித்தடங்களில் 23 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னையில் இருந்து நேற்று 7 சிறப்பு ரெயில்கள் வெளி மாவாட்டங்களுக்கு புறப்பட்டு சென்றன. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு 3 ரெயில்களும், மேட்டுப்பாளையத்துக்கு ஒரு ரெயிலும் சென்றன. இதேபோல் எழும்பூரில் இருந்து மதுரை, காரைக்குடி, திருச்சிக்கு தலா ஒரு ரெயில் புறப்பட்டு சென்றது.
இதையொட்டி சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரெயில்கள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, பணிமனைகளில் இருந்து ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. முக கவசம் அணிந்து வந்த மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமே ரெயில் நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து பயணிகளும் ஒரே நுழைவுவாயில் வழியாகத்தான் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விமான நிலையத்தில் இருப்பது போன்று, பயணிகளுடன் தொடர்பு இல்லாத டிக்கெட் சோதனை முறை செயல்படுத்தப்பட்டது. ரெயில் நிலைய நுழைவுவாயிலில் உள்ள கேமரா முன்பு பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை காண்பித்தனர். அதன் பின்னர் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் வரிசையில் நின்று ரெயில் பெட்டிக்குள் ஏறினார்கள். அங்கு முக கவசம் மற்றும் கையுறை அணிந்த டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி சரி பார்த்தனர். 5 மாதங்களுக்கு பின்னர் ரெயிலில் பயணிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.