தமிழ்நாட்டில் ‘அரசு பணிகள் தமிழர்களுக்கே’ என சட்டம் இயற்ற வேண்டும் - பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகள் தமிழர்களுக்கே என சட்டம் இயற்றவேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-09-06 17:56 GMT
சென்னை,

பா.ம.க. பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசு பணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், வேலைதேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து அரசு பணிகளும் முழுக்க முழுக்க தமிழர்களுக்கே வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதிசெய்யவேண்டும். அதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை வருகிற 14-ந்தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இயற்றவேண்டும்.

* தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மத்திய அரசின் 27 சதவீத ஓ.பி.சி. இடஒதுக்கீட்டில் தொகுப்பு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவேண்டும்.

* ‘நீட்’ தேர்வு எந்த நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டதோ, அந்தநோக்கம் நிறைவேறவில்லை. மாறாக கிராமப்புற, ஏழை மாணவர்கள்தான் மருத்துவக்கல்வி கற்கும் வாய்ப்புகளை இழந்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வை நாடு முழுவதுமோ அல்லது தமிழ்நாட்டில் மட்டுமோ நிரந்தரமாக ரத்துசெய்ய மத்திய அரசு முன்வரவேண்டும்.

* மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் தரவேண்டும்.

* நெல்கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தவேண்டும். தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயம்செய்யவேண்டும். தமிழ்நாட்டில் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்பது உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்