பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 25 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 25 பேரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-09-05 23:11 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், ஆதிச்சனூர் கிராமத்தில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த முருகன் மண்சரிந்து விழுந்து உயிரிழந்த செய்தி, ஈரோடு மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த செய்தி, கன்னியாகுமரி மாவட்டம், திட்டவிளை பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி, கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஜெர்சின் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி, கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த ஷிபு மீன்பிடித்த போது, படகு சாய்ந்ததில், கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தி, கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த இக்னேஷியஸ் என்கிற தோமா மீன்பிடிக்கும் போது, படகிலிருந்து தவறி கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து வேதனை அடைந்தேன்.

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் கலாநிதிமாறன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி, தஞ்சாவூர் மாவட்டம், திருலோகி கிராமத்தைச் சேர்ந்த கரும்பாயிரம் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி, நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி, கடலூர் மாவட்டம், மாளிகை மேடு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆதித்யா மற்றும் சிறுமி பாரதி ஆகிய இருவரும் செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து வேதனை அடைந்தேன்.

விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மீன்பிடி பணியின் போது தவறி விழுந்து, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், காஞ்சீபுரம் மாவட்டம் திருப்புட்குழி கிராமத்தைச் சேர்ந்த கஜன் மற்றும் சிறுவன் ஜெகப்பிரியன் தாமரை குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், ஈரோடு மாவட்டம் மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது, மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து வேதனை அடைந்தேன்.

திருச்சி மாவட்டம் திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம், நாவினிப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் இரண்டு குழந்தைகள் மகா விஷ்ணு மற்றும் அஜிவித்யாஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கொட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருபாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், ராமநாதபுரம் மாவட்டம், பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன்கள் ஜெகதீஸ்வரன் மற்றும் விகாஸ் ஆகிய இருவரும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும், காந்திநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் சிறுவன் ஜெப்ரி ரோஹித் என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து வேதனை அடைந்தேன்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கொட்டரை நீர் தேக்கத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்