ஆரோக்கியமாக இருந்தால்தான் கட்சிப் பணி ஆற்ற முடியும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
ஆரோக்கியமாக இருந்தால் தான் கட்சிப் பணியும் ஆற்ற முடியும் என்றும் உடல்நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள் என்றும் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுத்தினார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன் ஆகியோரின் உருவப்படங்களை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற தி.மு.க. குழுத் துணைத் தலைவர் கனிமொழி, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த் மற்றும் மறைந்த கே.பி.பி.சாமி குடும்பத்தினர் மற்றும் எஸ்.காத்தவராயன் குடும்பத்தினர் பங்கேற்றுப் புகழஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காணொலி காட்சி வாயிலாக, மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
இன்றைக்குப் படங்களாகக் காட்சி அளிக்கிற கே.பி.பி.சாமியாக இருந்தாலும் எஸ்.காத்தவராயனாக இருந்தாலும், அவர்கள் தங்களது குடும்பத்துக்கு மட்டும் உழைத்தவர்கள் அல்ல; தி.மு.க.வுக்கு மட்டும் உழைத்தவர்கள் அல்ல; தங்களது தொகுதியையும் தாண்டி இந்த மாநிலத்து மக்களுக்காக உழைத்தவர்கள். அதனால்தான் இன்று அவர்கள் படங்களைத் திறக்கிறோம். புகழஞ்சலி செலுத்துகிறோம்.
மீனவ நண்பனாகவே வாழ்ந்தவர் கே.பி.பி.சாமி. அத்தகைய மீனவ நண்பரை கே.வி.கே.குப்பம் இழந்திருக்கிறது; சென்னை மாவட்டக் தி.மு.க. இழந்துள்ளது; மீனவர் நலம் நாடும் மனிதரை இம்மாநிலம் இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் குடியாத்தம் எம்.எல்.ஏ. எஸ்.காத்தவராயன். குடியாத்தம் வட்டாரத்தில் அனைத்துத் தரப்பினரும் விரும்பும் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
இருவரும், மக்கள் பணியையும் கழகப் பணியையும் ஒருசேர 2 கண்களாக நினைத்துச் செயல்பட்டார்கள். இப்படித்தான் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். கழகப் பணியும் முக்கியம்; மக்கள் சேவையும் முக்கியம் என நினைத்து இரண்டிலும் கவனம் கொண்டு செயல்பட வேண்டும். அப்படிப் பணியாற்றிய கே.பி.பி.சாமியும், காத்தவராயனும் அடுத்தடுத்த நாள் மறைந்தது, எனது உள்ளத்தில் கனத்த வேதனையை ஏற்படுத்தியது.
அனைவருக்கும் நான் சொல்வது உடல்நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள். அதுதான் மிகமிக முக்கியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் கட்சிப் பணியும் ஆற்ற முடியும்; மக்கள் சேவையும் ஆற்றமுடியும். அதைவிட முக்கியமாக, உங்கள் குடும்பக் கடமைகள் இருக்கின்றன. இந்த மூன்றுக்காகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். கவனமாக இருங் கள்.
“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு” ஆகிய மூன்றையும் வலியுறுத்தினார் அண்ணா. அதேபோல், “உடல்நலம் - கட்சிப் பணி - மக்கள் சேவை” ஆகிய மூன்றையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த புகழஞ்சலிக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.