இதுவரையில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை தமிழகத்தில் ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா இறப்பு 3,144 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இறப்பு 3,144 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2020-07-22 23:30 GMT
சென்னை,

தமிழகத்தில் ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இறப்பு 3,144 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரையில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதே போன்று ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 58 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,481 ஆண்கள், 2,368 பெண்கள் என 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 25 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 49 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 329 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 740 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,171 பேர், ராணிப்பேட்டையில் 414 பேர், விருதுநகரில் 363 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரியில் 7 பேரும், ஈரோட்டில் 6 பேரும், கரூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 20 லட்சத்து 15 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 24 பேரும் என 74 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 21 பேரும், கடலூரில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், விருதுநகரில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், வேலூர், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், காஞ்சீபுரத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, தேனியில் தலா இருவரும், ராமநாதபுரம், கரூரில் தலா ஒருவரும் என 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இதுவரையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே கொரோனா உயிரிழப்பு 3,144 ஆக கணக்கிடப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 910 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,731 பேரும், விருதுநகரில் 471 பேரும், மதுரையில் 445 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 51 ஆயிரத்து 765 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்