சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-22 09:26 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும், விசாரணையின் பேரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு, சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். ஜெயராஜ், பென்னிக்ஸின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய இடங்களான சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, அரசு மருத்துவமனை என அனைத்து இடங்களுக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று வந்தனர். மேலும் தற்போது 3 காவலர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அந்த 3 காவலர்களையும் நாளை மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, தற்போது விசாரணையில் ஈடுபட்டு வரும் சி.பி.ஐ. அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு நாளைக்கு முன்பாகவே விசாரணை முடித்துக் கொள்ளப்பட்டு, இன்று மாலை 4 மணிக்கு  காவலர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

டெல்லியில் இருந்து வந்த 8 சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சாத்தான்குளம் வழக்கு குறித்து விசாரித்து வந்த நிலையில் தற்போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் செய்திகள்