மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி தேவை சென்னை ஐகோர்ட்டில் மருத்துவ கவுன்சில் வாதம்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோட்டின் அனுமதி வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.

Update: 2020-07-21 23:26 GMT
சென்னை,

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள், அ.தி.மு.க., தி.மு.க., திராவிடர் கழகம், பா.ம.க., ம.தி.மு.க., இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் உட்பட கட்சிகள் மற்றும் பலரும் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு, வருகிற 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதன்பின்னர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அந்த இடங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி வேண்டும்.’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் இல்லாமல், மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது” என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்