மதுரையில் மாரடைப்பு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அனுமதி மறுப்பு ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை கூட தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.;
மதுரை,
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால், கடந்த 14ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்புகளால் மதுரையில் இதுவரை 138 பேர் உயிரிழந்து உள்ளனர். 7,858 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 4,677 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 3,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரையில் கொரோனா பரவல் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. இதில், மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை கூட, தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வரை கேட்டு நிர்பந்தம் செய்யப்படுவதாக தகவல் வருகிறதே? கொரானாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து, மதுரை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நிலை அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.