மராட்டியம், டெல்லி மாநில அரசுகளை பின்பற்றி பல்கலைக்கழக தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு, வைகோ வலியுறுத்தல்
மராட்டியம், டெல்லி மாநில அரசுகளை பின்பற்றி பல்கலைக்கழக தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ்பொக்ரியால், ‘உயர்கல்வி என்பது மத்தியஅரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே செப்டம்பர் இறுதிக்குள் பல்கலைக்கழக இறுதிஆண்டு செமஸ்டர் தேர்வுகளை மாநிலஅரசுகள் நடத்தியே தீரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு, கல்விநிறுவனங்கள் மூடப்பட்டுக்கிடக்கும் சூழலில், தேர்வுகள் நடத்துவதுகுறித்து முடிவெடுக்கக்கூட மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறது.
உயர்கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்துள்ளது மட்டுமின்றி, லட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
மராட்டிய, டெல்லி மாநில அரசுகளை பின்பற்றி தமிழ்நாடுஅரசும் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்துசெய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். உள்மதிப்பீடுகளின் அடிப்படை யில் பட்டங்களை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.