தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது எப்படி? - மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டருடன் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று 3 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் தொற்று பரவல் ஓரளவு குறைந்துள்ள நிலையில், தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அன்றாடம் உயர்ந்த வண்ணம் உள்ளது. 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இதில் பங்கேற்றனர்.
கொரோனா பரவல் தடுப்பில் தற்போதைய நிலை?, தொற்று எண்ணிக்கை உயர்வதற்கு என்ன காரணம்? ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் எந்த அளவில் வழங்கப்பட்டுள்ளது? என்பது போன்ற அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு மாவட்ட கலெக்டரிடமும் தலைமை செயலாளர் கே.சண்முகம் பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். எனவே நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 7 மணி வரை நீடித்தது. 3 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. ஜெ.கே.திரிபாதி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக மேலாண் இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே அதனடிப்படையில் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.