தமிழகத்தில் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? - அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன?, எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன? என்ற விவரத்தை 22-ந்தேதி தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், ‘தினமலர்’ திருச்சி, வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோர் வருமானம் இழந்து,
பெரும் சிரமத்தில் உள்ளனர். கோயில்கள் மூடப்பட்டாலும், அன்றாட பூஜைகளை நடத்துவதற்காக, இவர்கள் அனைவரும் தினமும் கோவிலுக்கு வந்து வழக்கம்போல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் கிடையாது. கோவிலுக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கோவில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 35 சதவீதத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியமாகவும், 35 சதவீதத்தை கோவில் பராமரிப்புக்காகவும் செலவிடப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் கோவில்களின் உபரி நிதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையிடம் தற்போது 30 சதவீத உபரி நிதியாக சுமார் ரூ.300 கோடி உள்ளது. எனவே, அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, “இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், பல முரண்பாடுகள் உள்ளன” என்று வாதிட்டார். இந்து அறநிலையத்துறை சார்பாக ஆஜரான வக்கீல், “கோவில் பணியில் ஈடுபட்ட பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது. மற்றவர்கள் ரேஷன் கடை மூலம் அரசு வழங்கும் உதவித் தொகையை பெற்று உள்ளார்கள். ஆனால், தனியாக உதவித்தொகை வழங்கப்படவில்லை” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கப்பட்டுவிட்டதா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல், கிராமத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்றவை மூடப்பட்டுள்ளன” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோவில் திறக்கப்பட்டுள்ளன? அதில் பூசாரிகள் எத்தனை பேர்? மற்ற ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்ற விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை வருகிற 22-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.