பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்ரு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.;

Update: 2020-07-16 20:15 GMT
சென்னை, 

பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எழுதிய தேர்வு ஆகியவற்றின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ் குறித்து அரசு தேர்வுத்துறை, அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, பின்னர் அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்திருக்க வேண்டும். அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாளில் தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தேர்வர்கள் அவரவர் நேரடியாக மதிப்பெண் பட்டியலை http:// www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் சொல்லும் நாட்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலை வைத்து கல்லூரி சேர்க்கைக்கும், மற்ற அவசர தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர், அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கப்பட்டு பள்ளிக்கு வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்