என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை,
2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன்மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கமிஷனர் விவேகானந்தன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உள்பட அதிகாரிகள் பலர் உடன்இருந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-
2019-20-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் ஆன்லைன் வாயிலாக நடத்திமுடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த கல்வியாண்டும் (2020-21-ம் ஆண்டு) மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் www.tne-a-o-n-l-i-ne.org, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி ஆகும்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அக்டோபர் 15-ந்தேதிக்குள் என்ஜினீயரிங் கலந்தாய்வை முடிக்க அறிவுறுத்தி இருக்கிறது. அதற்குள் கலந்தாய்வை முடிக்க நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி, அசல் சான்றிதழை வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 20-ந்தேதி வரையில் பதிவேற்றம் செய்யலாம். ரேண்டம் எண் அடுத்த மாதம் 21-ந்தேதியும், தரவரிசை பட்டியல் செப்டம்பர் 7-ந்தேதியும் வெளியிடப்படும். சேவை மையம் வாயிலாக அசல் சான்றிதழை அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை சரிபார்த்துக்கொள்ளலாம்.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும், பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரையிலும், துணை கலந்தாய்வு அக்டோபர் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும், எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 14 மற்றும் 15-ந்தேதிக்குள்ளும் நடைபெறும். கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாகவே நடக்க உள்ளது.
மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரடியாக வரவேண்டும் என்பது இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்கள் மட்டும் நேரடியாக வரவேண்டும்.
அதேபோல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு சேவை மையங்களை அணுகாமல் தங்களுடைய செல்போன் மூலமாக சரிபார்த்துக்கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் 52 சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதிலும் மாணவர்கள் சென்று பயன்பெறலாம். 2020-21-ம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கைக்காக 465 கல்லூரிகள் இதுவரை பதிவு செய்து இருக்கின்றன. 2019-20-ம் கல்வியாண்டில் 480 கல்லூரிகளில் இருந்த 1 லட்சத்து 43 ஆயிரத்து 871 இடங்களில் 62.6 சதவீதம் இடங்கள் நிரம்பின. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக கல்லூரிகள் இருக்கின்றன. அவையெல்லாம் சரிசெய்த பிறகு, கல்லூரிகளை முறையாக சுத்தம் செய்து, மீண்டும் மாணவர்கள் கல்லூரி வகுப்பறைகளுக்கு வந்து படிக் கும் நிலை ஏற்படுத்தப்படும்.
இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்- அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும். அதேபோல், கல்லூரி கல்வி கட்டணம் குறித்து கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை கல்லூரிகள் பின்பற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் கே.பி.அன்பழகன், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.