மதுரையில் சிட்டுக்குருவிக்காக 3 மாதங்களாக வாகனம் பயன்படுத்தாத வழக்கறிஞர்

மதுரையில் சிட்டுக்குருவி கூடு கட்டியதற்காக 3 மாதங்களாக தனது ஸ்கூட்டியை பயன்படுத்தாத வழக்கறிஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.;

Update: 2020-07-15 13:20 GMT
மதுரை,

மதுரையில் உலகனேரி பகுதியை சேர்ந்தவர் அருண் சுவாமிநாதன்.  இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அலுவலக பணிகளுக்கு சென்று வந்துள்ளார்.  தனது வீட்டின் வெளியே ஸ்கூட்டியை அவர் நிறுத்தி வைத்துள்ளார்.  இந்நிலையில், இவரது வாகனத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியுள்ளது.

அதனால் கடந்த 3 மாதங்களாக அதே இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது.  அவர் தனது தேவைக்காக, அந்த வாகனத்தில் செல்லாமல் அதனை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிட்டுக்குருவி கூட்டில் முட்டைகளையிட்டு உள்ளது.  அதில் குஞ்சு ஒன்றும் பொரிந்து வெளியே வந்துள்ளது.  இதனால் அந்த வாகனம் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும் என்றும் அதனை நகர்த்த போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  சிட்டுக்குருவி இனம் மெல்ல எண்ணிக்கையில் குறைந்து வரும் சூழலில் நல்லெண்ணத்துடன் வழக்கறிஞர் செயல்பட்டு வருவதற்கு அந்த பகுதியிலுள்ள அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்