கொரோனா தொற்றுக்கு மீனம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பலியானார். இதையடுத்து, அவரது உடல் போலீசார் முன்னிலையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் குருமூர்த்தி (வயது 54). இவர் மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் மீனம்பாக்கம் பகுதியில் தீவீர ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தார்.
இதற்கிடையே அவருக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 26-ந் தேதி அவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு கோமதி என்ற மனைவியும் அலமேலு மங்கை (25) என்ற மகளும், தினேஷ் (20) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உடல் தாம்பரத்தில் உள்ள நகராட்சி மின்மயானத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அவருக்கு, தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன், மீனம்பாக்கம் உதவி கமிஷனர் நடேசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி படத்தை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர்கள் தினகரன், அருண், அமுல்ராஜ், இணை கமிஷனர்கள் பாபு உள்பட போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னையில் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உள்பட 3 போலீசார் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.